கரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. இதனால் மக்கள் அதிகமாக கூடும் முக்கிய நகரங்களில் வியாபாரிகள் தாமாகவே முன்வந்து முழு கடையடைப்பு நடத்தி, கரோனா தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த ஓத்துழைத்து வருகின்றனர்.
அதே போல் பொதுமக்கள் அதிகமாக கூடுவதையும், நடமாடுவதையும் தவிர்க்க தென்காசி மாவட்டம் சுரண்டை வியாபாரிகள் சங்கம், காமராஜர் காய்கனி சந்தை வியாபாரிகள் சங்கம், உணவு விடுதி உரிமையாளர்கள் சங்கம், நுகர்பொருள் விநியோகஸ்தர் சங்கங்களின் கூட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், தென்காசி மாவட்டம், சுரண்டை பேரூராட்சி பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் இன்று (ஜூலை 11) தொடங்கி வரும் திங்கட்கிழமை வரை மூன்று நாட்கள் தொடர் முழு கடையடைப்பு நடந்த தீர்மானிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில், இன்று(ஜூலை 11) காலை முதலே அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. இறைச்சி, மீன், சிக்கன் விற்பனை கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.
ஆனால் அத்தியாவசியப் பொருள்களான பால், மருந்து கடைகள் மட்டும் திறந்திருந்தன. அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள் வழக்கம்போல் இயங்கின. கார், ஆட்டோ, டூரிஸ்ட் வாகனங்கள் இயங்கவில்லை. முழு அடைப்பால், நூற்றுக்கணக்கான கடைகள் அடைக்கப்பட்டன.