உலகளாவிய கோவிட்-19 பயணக்கட்டுப்பாடுகளால் சிங்கப்பூரில் சிக்கித் தவித்துவரும் இந்தியர்களை தாயகம் அழைத்துவர மத்திய அரசு வந்தே பாரத் மிஷன் திட்டத்தின் கீழ் கடந்த மே மாதம் 7ஆம் தேதி முதல் நடவடிக்கை எடுத்துவருகிறது. அந்த வகையில், மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து ஏர் இந்தியா சிறப்பு விமானம் 173 பயணிகளுடன் நேற்று (ஜூன் 23) இரவு சென்னைக்கு வந்தது.
இந்த விமானத்தில் திருநெல்வேலி மாவட்டம் கொலியனூர் கீழத் தெருவைச் சேர்ந்த மாடசாமி(46) பயணம் மேற்கொண்டிருந்தார். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென மாடசாமிக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து, விமானத்தில் இருந்த பணிப்பெண்கள் அவருக்கு முதல் உதவி அளித்தனர்.
பின்னர், இது குறித்து சென்னை விமான நிலையத்தின் மருத்துவக் குழுவிற்கு தகவல் தெரிவித்தனர். விமானம் சென்னையில் தரை இறங்கியதும் விமான நிலையத்தில் இருந்த மருத்துவக் குழுவினர், விரைந்து சென்று மாடசாமியை பரிசோதனை செய்தனர். அதில், அவர் விமானத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது.
இதையடுத்து, விமான நிலைய காவல்துறையினருக்கு கொடுக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த காவல்துறையினர், அவரது உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு கரோனா தொற்றுநோய் பாதிப்பு இருக்கிறதா என்ற சோதனையும் நடைபெறும் என தெரியவருகிறது.