உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்றுவருகிறது. இதில், இலங்கை - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 7ஆவது லீக் போட்டி கார்டிஃப் நகரில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் குல்பதீன் நைப் முதலில் பந்துவீச தீர்மானித்தார். இதைத்தொடர்ந்து, முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 33 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழந்து 182 ரன்களை எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டது.
இதனால் ஆட்டம் 41 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதையடுத்து, பேட்டிங் செய்த இலங்கை அணி 36.5 ஓவர்களில் 201 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இலங்கை அணியில் அதிகபட்சமாக, குசால் பெரேரா 78 ரன்கள் விளாசினார். ஆப்கானிஸ்தான் அணி தரப்பில் முகமது நபி நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதைத்தொடர்ந்து, டக்வொர்த் லீவிஸ் முறைப்படி 41 ஓவர்களில் 187 ரன்கள் இலக்குடன் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி, இலங்கை அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. அந்த அணி 13.4 ஓவர்களில் 57 ரன்களை இழந்து ரன் குவிப்பில் தடுமாறிய நிலையில், கேப்டன் குல்பதீன் நைப், நஜிபுல்லாஹ் சட்ரான் ஜோடி சிறப்பாக பேட்டிங் செய்து ரன்களை குவித்தது.
இவ்விரு வீரர்களும் ஆறாவது விக்கெட்டுக்கு 64 ரன்களை சேர்த்த நிலையில், குல்பதீன் 23 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து ரஷித் கான், தவ்லத் சட்ரான், ஆகியோர் வரிசையாக பெவிலியனுக்குத் திரும்பினார். இதனால், மறுமுனையில், இருந்த நஜிபுல்லாஹ் ஓரளவிற்கு தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றிபெற வைக்கப் போராடினார்.
இருப்பினும், ஆப்கானிஸ்தான் அணியின் வெற்றிக்கு 55 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தாக வேண்டிய நிலையில், நஜிபுல்லாஹ் ரன் அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்து வந்த ஹமித் ஹாசன் மலிங்காவின் பந்துவீச்சில் போல்ட் ஆனார். இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி 32.4 ஓவர்களில் 152 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதன் மூலம், ஆப்கானிஸ்தான் அணி இப்போட்டியில் 34 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியிடம் போராடி தோல்வி அடைந்தது. இலங்கை அணி தரப்பில் நுவான் பிரதீப் நான்கு, மலிங்கா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர்.