மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்காவில் உள்ள இடக்குடி கிராமத்தின் பஞ்சாயத்து தலைவரும், அதிமுகவைச் சேர்ந்தவருமான தங்கமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், "பூம்புகார் தொகுதியில் அதிமுக சார்பில் மீண்டும் போட்டியிடும் எம்.எல்.ஏ. பவுன்ராஜும், கும்பகோணம் டி.எஸ்.பி-யின் மகன் பாலகிருஷ்ணுனும் தேர்தலுக்கு இரு நாள்கள் முன்பாக தனது வீட்டுக்கு வந்து, 5 லட்சத்து 48 ஆயிரம் ரூபாயைக் கொடுத்து வாக்காளர்களுக்கு விநியோகிக்கும்படி கூறினர்.
அதற்கு மறுத்ததால் தன் மீது பொய் வழக்கு தொடர்வதாக மிரட்டினர். இது தொடர்பாக பூம்புகார் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த வழக்கும் பதிவு செய்யப்படாததால், அதிமுக வேட்பாளர் மீதும், டி.எஸ்.பி. மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி தலைமையிலான அமர்வு, குற்ற விசாரணை முறை சட்டப் பிரிவின் படி, மனுதாரர் முதலில் உரிய கீழமை நீதிமன்றத்தை அணுகும்படி அறிவுறுத்தி, வழக்கை முடித்துவைத்தது.