சென்னை, தமிழ்நாட்டில் செயல்படும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள அனைத்து இடங்களிலும் மாணவர் சேர்க்கையை முடிக்க நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக கல்லூரி கல்வி இயக்குநர் பூரணச்சந்திரன் தெரிவித்தார்.
தமிழ்நாடில் உள்ள 109 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2020-21ஆம் கல்வி ஆண்டில் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். கரோனா தொற்று காரணமாக இந்த விண்ணப்பங்களை இணையதளம் மூலம் பெறப்பட்டது.
தமிழ்நாட்டில் உள்ள 109 கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர்வதற்காக ஜூன் 20ஆம் தேதி முதல் ஜூலை 31ஆம் தேதி வரை 3 லட்சத்து 12 ஆயிரத்து 883 மாணவர்கள் விண்ணப்பம் செய்திருந்தனர்.
அவர்களில் 2 லட்சத்து 25 ஆயிரத்து 819 மாணவர்கள் கட்டணம் செலுத்தி இருந்தனர். மாணவர்களின் சான்றிதழ்கள் இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டன.
அதனடிப்படையில், கல்லூரி வாரியாக மாணவர்கள் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. சிறப்புப் பிரிவினருக்கு ஆகஸ்ட் 28 ஆம் தேதி அன்று சேர்க்கை நடத்தப்பட்டது.
ஆகஸ்ட் 29ஆம் தேதி முதல் செப்டம்பர் 4 ஆம் தேதி வரை பொது பிரிவினருக்கான முதற்கட்ட மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டன.
மாணவர் சேர்க்கை குறித்து கல்லூரி கல்வி இயக்குநர் பூரணச்சந்திரன் கூறுகையில், "தமிழ்நாட்டில் உள்ள 109 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சில கல்லூரிகள் தவிர மற்ற கல்லூரிகளில் பெரும்பாலான இடங்களில் மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
75 விழுக்காட்டிற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இடங்களில் சேர்ந்துள்ளனர்.
மாவட்டங்களுக்கு இடையே போக்குவரத்து தற்போது தொடங்கியுள்ளதால் வேறு மாவட்டங்களில் இருந்து சென்னை போன்ற நகரங்களில் உள்ள கலை அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கு விண்ணப்பித்த மாணவர்கள் தற்போது வந்து சேர்ந்து கொண்டுள்ளனர்.
சில கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை கூறிய இடங்கள் நிரம்பி விட்டதால் குறிப்பிட்ட பாடப்பிரிவுகளில் கூடுதலாக மாணவர்களை சேர்க்கைக்கு அனுமதிக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.
மேலும் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு கூடுதலாக வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளோம்.
தற்போது விண்ணப்பித்துள்ள பாடப்பிரிவுகளில் இடம் கிடைக்காத மாணவர்களின் விண்ணப்பித்தவர்களுக்கு தகுதியுள்ள பிற பாடப்பிரிவுகளில் சேர பரிசீலனை செய்து விதிகளை பின்பற்றி சேர்க்கை வழங்கலாம்.
கல்லூரியில் சுழற்சி ஒன்றில் இடம் கிடைக்காத மாணவர்கள் விண்ணப்பங்களை தகுதி இருப்பின் சுழற்சி ரெண்டில் நடத்தப்படும் பாடப்பிரிவுகளுக்கு சேர்க்கை பெற பரிசீலனை செய்து விதிகளை பின்பற்றி சேர்க்கை வழங்கலாம்.
அனுமதிக்கப்பட்ட இடங்களுக்கும் குறைவான அளவில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு கல்லூரிகளில் அந்தக் கல்லூரி முதல்வர்கள் சேர்க்கை வழங்கப்பட்ட இடங்கள் போக மீதமுள்ள இடங்களை நிரப்பிட தக்க நடவடிக்கைகள் மேற்கொண்டு விண்ணப்பங்களை கல்லூரி அளவிலேயே வழங்கி விதிகளை பின்பற்றி விரைவில் மாணவர் சேர்க்கை பணிகளை முழுமையாக முடிக்க வேண்டும்.
மாணவர் சேர்க்கை பணிகளை அந்த கல்லூரிகளில் செயல்படும் சேர்க்கை குழு மேற்பார்வையிட்டு எந்தவித புகாருக்கும் இடம் அளிக்காமல் கல்லூரி முதல்வருக்கு ஒத்துழைப்பு வழங்கும் அறிவுறுத்தப்படுகிறது" என்றார்.