தூத்துக்குடி மாவட்டம் வேம்பாறுவைச் சேர்ந்த ஏசுவடியான் என்பவர் உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல்செய்தார். அதில், "எங்கள் கிராமத்தில் வேம்பாறு ஆறு ஓடுகிறது. ஐந்தாம்புளி என்ற இடத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் வேம்பாறு கடலில் கலக்கிறது.
தண்ணீர் கடலில் கலப்பதைத் தடுத்திடும் வகையில் வேம்பாறு பகுதியில் தடுப்பணை கட்டப்பட்டது. தரமற்றப் பொருள்கள் மூலம் தடுப்பணை கட்டப்படுகிறது. இதில் பெருமளவு முறைகேடு நடந்துள்ளது. எனவே, தரமான பொருள்களைக் கொண்டு தடுப்பணையை முறையாகக் கட்டுமாறு உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், எஸ். ஆனந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, கட்டுமான பணி முடிந்துள்ளது. எனவே, பொதுப்பணித் துறை வைப்பாறு செயற்பொறியாளர், உதவி பொறியாளர் ஆகியோர் மீண்டும் சம்பவ இடத்திற்குச் சென்று பணிகள் திருப்திகரமாக நடந்துள்ளனவா என்பது குறித்து ஆய்வுசெய்ய வேண்டும். திருப்தியாக இல்லாவிட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கையை ஆறு வாரத்திற்குள் எடுக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளனர்.