உலகளாவிய அச்சுறுத்தலான கரோனா பாதிப்பு இந்தியாவில் தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக, தமிழ்நாட்டில் சமூகப் பரவலை அடைந்துள்ள அதனை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மாநில அரசின் உத்தரவின் பேரில் பல்வேறு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதில் ஒரு பகுதியாக பக்தர்கள் அதிகம் வந்து செல்லும் கோவில்கள் நோய்த் தடுப்பு நடவடிக்கையாக மூடப்பட்டுள்ளன. அந்த வகையில், கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் ஈரோடு மாவட்டத்தை அடுத்துள்ள சத்தியமங்கலம் அருகே உள்ள புகழ்பெற்ற பண்ணாரி அம்மன் கோவிலும் மூடப்பட்டது.
ஆடி அமாவாசை வழிபாட்டுக்குச் சிறப்புப்பெற்ற இந்தக் கோவிலுக்கு கோவை, ஈரோடு, சேலம் ஆகிய பகுதிகளில் இருந்து சாமி தரிசனம் செய்ய திரண்டு வருவது வழக்கம். கரோனா அச்சுறுத்தல் காரணமாக கோயில் மூடப்பட்ட நிலையில், அந்தக் கூட்டம் முழுமையான குறைந்து காணப்பட்டது.
இருப்பினும், பல்வேறு பகுதிகளில் இருந்து இருசக்கர வாகனத்தில் வருகை தந்த பக்தர்கள் கோயில் மூடப்பட்டதால், கருவறை முகப்பு கேட்டின் முன் சூடம் ஏற்றி, ஊதுபத்தி கொளுத்தி வைத்து வழிபட்டனர்.
கோவிலில் தரிசனம் செய்ய அனுமதி இல்லாத நிலையிலும், பக்தர்கள் தொடர்ந்து வந்ததால் கோவில் பணியாளர்கள் கடும் நெருக்கடிக்குள்ளாகினர்.
இந்த நிலையில், கரோனோ வைரஸ் பரவும் விதம் குறித்தும், பொது மக்கள் தங்களை நோய் தாக்காதவாறு எவ்வாறு தற்பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும், விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்ட அறிவிப்பு துண்டறிக்கைகள் நேரில் வழங்கப்பட்டன.
மேலும், மக்கள் தரிசனம் செய்த இடத்தில் சுகாதாரத்துறை சார்பில் நோய் தடுப்பு கிருமி நாசினி மருந்துகளும் தெளிக்கப்பட்டன.
பண்ணாரி அம்மன் கோவில் கர்நாடக மாநிலத்தின் எல்லையில் அமைந்துள்ளதால், ஈரோடு, திருப்பூர், கோவையில் இருந்து செல்லும் வாகனங்களும் பண்ணாரி வழியாகவே திம்பம் மலைப்பாதையைக் கடந்து செல்கின்றன.
இதனால் தொற்று ஏற்படும் அபாயம் அதிகமுள்ள காரணத்தால், பண்ணாரியில் 3 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு தொற்று நோய் கண்டறிதல் சோதனைகள் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.