திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த அசோகன் தெருவைச் சேர்ந்தவர் அண்ணாமலை (29). இவர் ஆயுதப்படைப்பிரிவில் காவலராகப் பணிபுரிந்து வருகிறார். அண்ணாமலை அதே பகுதியைச் சேர்ந்த மேகலா (28) என்ற பெண்ணை நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதனிடையே, மேகலாவிடம் பல முறை ஆசை வார்த்தை கூறி அண்ணாமலை உறவில் இருந்துள்ளார். இதனால், மேகலா கருவுற்று இரண்டு முறைக்கு மேலாக கருக்கலைப்பும் செய்துள்ளார். இதற்கிடையே, நான்கு ஆண்டுகளுக்கு முன் அண்ணாமலை திருப்பூர் பனியன் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்ததாகவும், தற்போது காவலர் பணி கிடைத்ததால் தன்னை திருமணம் செய்யாமல், ஏமாற்ற முயற்சிப்பதாகவும் மேகலா கருதியுள்ளார். இதனால், மனமுடைந்த மேகலா இது குறித்து மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
பின்னர் அவர் கூறுகையில், "அண்ணாமலை வீட்டில் பெண் பார்க்கும் நிகழ்வு நடைபெற்று வருகிறது. அதையறிந்து எனது குடும்பத்தினருடன் அண்ணாமலையின் வீட்டிற்குச் சென்று திருமணம் செய்து கொள்ளுமாறு வலியுறுத்தினோம். ஆனால், அண்ணாமலையின் குடும்பத்தினர் அதற்கு மறுப்பு தெரிவித்தனர்.
இதன் காரணமாக, திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் என்னை காதலித்து கர்ப்பமாக்கி ஏமாற்றிய காவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தேன். அதனைப் பெற்றுக்கொண்ட காவல் கண்காணிப்பாளர், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்” என்று தெரிவித்தார்.