கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழி பழவிளை அருகே உள்ள பூச்சிவிளாகத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர், தனது தந்தை இறந்துவிட்டதால், தாய், தங்கையுடன் வசித்து வருகிறார்.
எட்டாம் வகுப்பு வரை படித்துள்ள இச்சிறுமி, வறுமையின் காரணமாக படிப்பை நிறுத்திவிட்டு வீட்டிலேயே இருந்துள்ளார். கூலி வேலை செய்து வருமானம் ஈட்டும் தாய் ஒருவரை நம்பி தனது நாள்களைக் கடத்தி வந்துள்ளார்.
இவர்களது வீட்டின் அருகே வசித்து வருபவர் அப்பன் ராஜ் (50). கூலித்தொழிலாளியான இவரிடம், பக்கத்து வீட்டுக்காரர் என்ற முறையில், தாத்தா என்று அழைத்து அச்சிறுமி பழகி வந்துள்ளார்.
இதனை சாதகமாக்கிக்கொண்ட அப்பன் ராஜ், சந்தர்ப்பம் பார்த்து அந்த சிறுமியை, அரை நிர்வாணமாக புகைப்படம் எடுத்து வைத்துக்கொண்டு அதனை சமூகவலைதளங்களில் பதிவிடப்போவதாக மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.
பின்னர், இதனை வெளியே கூறினால் தாயாரையும், தங்கையையும் கொன்று விடுவதாகவும் கூறி மிரட்டியுள்ளார். இச்சம்பவம், அந்த இளம்பெண்ணின் தாயாருக்குத் தெரியவரவே இது குறித்து கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார்.
அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அப்பன் ராஜை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.