சென்னையைச் சேர்ந்தவர் பால்ராஜ்(54). இவர் சொந்தமாக ரியல் எஸ்டேட் தொழில் செய்துவருகிறார். இவர் வசிக்கும் அதே பகுதியில் தனது பாட்டியுடன் வசித்துவருபவர் 15 வயது சிறுமி. இவர் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்துவருகிறார். மேலும் சிறுமி வறுமையின் காரணமாக பால்ராஜ் வீட்டில் வேலைசெய்து வந்துள்ளார்.
இதனைப் பயன்படுத்திக் கொண்ட பால்ராஜ் அச்சிறுமிக்கு அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இவர் கடந்த ஒரு வருடமாக சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் இதனைப் பற்றி வெளியே கூறினால் கொன்றுவிடுவதாகவும் சிறுமியை மிரட்டி வந்துள்ளார்.
மிகுந்த மன உளைச்சலுக்குள்ளான சிறுமி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இப்புகாரின் அடிப்படையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து பால்ராஜை போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்தனர்.