ராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் அருகே சொக்காணை கிராமத்தைச் சேர்ந்த சகோதரர்களான மூக்கூரான், சண்முகவேல் இடையே சொத்து தகராறு காரணமாக முன்விரோதம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் (ஜூன் 8) இரவு மூக்கூரான் மகன் வில்வதுரையின் வீட்டில் வளர்க்கப்படும் நாய், சண்முகவேல் வளர்த்து வரும் ஆட்டைக் கடித்துள்ளது. இதனால் இரு குடும்பத்தினரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது சண்முகவேல் அவரது உறவினர்களான சிவத்தையா, முத்துராமலிங்கம், கார்த்திக் ராஜா ஆகியோர் சேர்ந்து, வில்வதுரை அவரது சகோதரர்களான கணேசன், முனியசாமி ஆகியோரை அரிவாளால் தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த வில்வதுரை, மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து கணேசன் அளித்த புகாரின் பேரில், சிக்கல் காவல் துறையினர் சண்முகவேல் உள்ளிட்ட நான்கு பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்தனர். இவ்வழக்கில் சண்முகவேல், முத்துராமலிங்கம், கார்த்திக் ராஜா ஆகியோரை கைது செய்தனர்.