சென்னை அரும்பாக்கம் பகுதியில் குடும்பத்துடன் வாடகை வீட்டில் வசித்து வருபவர் சந்தியா (31) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது வீட்டிற்கு அருகே முன்னதாக, வாடகைக்கு குடியிருந்தவர் ஓட்டுநர் முருகானந்தம் (49). இவர் தற்போது அமைந்தகரையில் உள்ள முரளிதரன் தெருவில் வசித்து வருகின்றார்.
இந்நிலையில், நேற்று சந்தியா குடியிருக்கும் வீட்டின் உரிமையாளரின் குடும்பத் திருமணம், அதே வீட்டில் நடைப்பெற்றுள்ளது. இந்தத் திருமண நிகழ்ச்சிக்கு முருகானந்தம் வந்துள்ளார்.
அப்போது, சந்தியா காற்று வருவதற்காக, தனது வீட்டுக் கதவைத் திறந்து கொண்டு உறங்கியுள்ளார். இந்நிலையில், நிகழ்ச்சி முடிந்த பின்பு, முருகானந்தம் சந்தியாவின் வீட்டிற்குள் நுழைந்து பாலியல் வன்புணர்வு செய்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து உடனடியாக சந்தியா அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில், காவல் துறையினர் முருகானந்தம் மீது, அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்தது, பாலியல் வன்புணர்வு ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து, அவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.