தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே திம்மரசநாயக்கனூர், பிள்ளைமுகன்பட்டி, பொம்மிநாயக்கன்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் விவசாயிகள் கால்நடை வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு செயல்படும் பால் கூட்டுறவு சங்கங்கள் மூலம் பால் கொள்முதல் செய்யப்பட்டு தேனி ஆவின் நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்த கிராமங்களில் விவசாயத்துக்கு அடுத்தப்படியாக கறவை பசுமாடுகள் வளர்த்து நல்ல வருமானம் ஈட்டப்படுகிறது. தற்போது, கரோனா ஊரடங்கால் கடந்த இரண்டு மாதங்களாக தேனி ஆவின் நிர்வாகம் பாலுக்கான கொள்முதல் விலையை லிட்டருக்கு 31 ரூபாயிலிருந்து 27 ரூபாயாக குறைத்து வழங்கி வருவதாகவும், தனியார் நிறுவனங்களிடமிருந்து குறைந்த விலைக்கு பாலை வாங்கிக்கொண்டு தங்களது பாலை திருப்பி அனுப்புவதாகவும் கால்நடை வளர்ப்பு விவசாயிகள் புகார் கூறுகின்றனர்.
இந்நிலையில், பால் கொள்முதல், விலை குறைப்பு செய்த ஆவின் நிறுவனத்தை கண்டித்து ஆண்டிபட்டி அருகேயுள்ள திம்மரசநாயக்கனூர் கிராமத்தில் பசும்பாலை சாலையில் கொட்டி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், மூன்று கிராமங்களைச் சேர்ந்த கால்நடை வளர்ப்பு விவசாயிகள் கலந்துகொண்டனர்.
அதைத் தொடர்ந்து தங்களுக்கான கொள்முதல் விலையை ஆவின் நிர்வாகம் உயர்த்தி வழக்கம்போல பால் கொள்முதல் செய்யாவிட்டால் போராட்டத்தில் ஈடுபடபோவதாக விவசாயிகள் எச்சரித்தனர்.