கோயம்புத்தூர் செல்வபுரம் அருள் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் ரித்தீஸ். இவரது மனைவி அன்னபூரணி. இவர்களின் திருமணத்தின் போது அன்னபூரணியின் பெற்றோர் இரண்டு கிலோ தங்கம், 58 கிலோ மதிப்பிலான வெள்ளி பொருள்கள், 66 கேரட் வைர பொருள்கள் ஆகியவற்றை வரதட்சணையாக கொடுத்தனர்.
இருந்தபோதும், அன்னபூரணியின் கணவர் ரித்தீஸ், மாமியார் கல்பனா, மாமனார் ஸ்ரீகாந்த் ஆகியோர் மேலும் நகைகள், பணம், கார் போன்றவற்றை கேட்டு தொந்தரவு செய்தும், அன்னபூரணிக்கு முறையாக உணவளிக்காமலும் துன்புறுத்தி வந்தனர். மேலும், 2019ஆம் ஆண்டு அன்னபூரணியை அவரது தாய் வீட்டிற்கே அனுப்பி வைத்தனர்.
இது குறித்து மகிளா நீதிமன்றத்தில் அன்னபூரணி வழக்கு தொடர்ந்தார். அதைத் தொடர்ந்து மகளிர் நீதிமன்ற உத்தரவின் பேரில், கணவர், மாமியார், மாமனார் ஆகிய மூவர் மீதும் வரதட்சனை கொடுமைப் பிரிவின் கீழ், ஆர்.எஸ்.புரம் அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.