தமிழ்நாட்டில் உள்ள 109 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் நேற்று (ஜூலை 20ஆம் தேதி) மாலை முதல் இணைய வழியில் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
மாணவர்களுக்கான பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஏற்கனவே வெளியிடப்பட்டதால், தங்களின் மதிப்பெண்ணிற்கு ஏற்ப கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர்வதற்கு ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர்.
ஜூலை 20ஆம் தேதி மட்டும் கல்லூரியில் சேர 89 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பங்களை பெற்றுள்ளனர். அவர்களில் 60 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் அன்றே விண்ணப்பங்களை முழுமையாக பூர்த்தி செய்து சமர்ப்பித்துள்ளனர்.
மேலும், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தாங்கள் எந்த கல்லூரியில் என்ன பாடப் பிரிவில் சேர விரும்புகிறோம் என்பதையும் தேர்வு செய்துள்ளனர். விண்ணப்பக் கட்டணத்தை சுமார் 40 ஆயிரம் மாணவர்கள் செலுத்தியுள்ளனர்.
தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களின் உறுப்புக் கல்லூரிகளில் சுமார் ஒரு லட்சத்து 71 ஆயிரத்து 350 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு ஒரே நாளில் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்திருப்பது கவனிக்கத்தக்கது.
மாணவர்கள் தங்களின் சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள தகவலறியும் மையங்களின் தொடர்பு எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த மாதம் 31ஆம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்க கால அவகாசம் உள்ளது குறிப்பிடத்தக்கது.