கரோனா தொற்றால் சென்னையில் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்படைகின்றனர். இருப்பினும் குணமடைந்தவரின் சதவீதமும் அதற்கு சரி சமமாக உள்ளது.
இந்த தொற்றை மேலும் குறைப்பதற்காக மாநகராட்சியும், சுகாதாரத் துறையும் பொதுமக்களுக்கு முகக்கவசம், கபசுரக் குடிநீர் வழங்குவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக தினமும் 15 மண்டலங்களிலும் மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகின்றன. மே 8ஆம் தேதி முதல் இன்று (ஜூலை 28) வரை மாநகராட்சி சார்பில் மொத்தம் 24 ஆயிரத்து 119 மருத்துவ முகாம்கள் நடைபெற்று உள்ளது.
அதில் 14 லட்சத்து 28 ஆயிரத்து 249 நபர்கள் பரிசோதிக்கப்பட்டுள்ளனர். சிறு அறிகுறி இருந்த 73 ஆயிரத்து 740 நபர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 14ஆயிரத்து 748 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், இன்று (ஜூலை28) 537 மருத்துவ முகாம்கள் நடைபெற்றன. அதிகபட்சமாக கரோனா பரவி வரும் அண்ணாநகரில் 67 மருத்துவ முகாம்களும், தேனாம்பேட்டையில் 59 மருத்துவ முகாம்களும் நடைபெற்றன.
இன்று நடைபெற்ற 537 மருத்துவ முகாம்களில் மொத்தம் 25 ஆயிரத்து 983 நபர்கள் பரிசோதிக்கப்பட்டனர். அதில் ஆயிரத்து 622 நபர்கள் அறிகுறி இருந்ததால் அருகில் உள்ள கரோனா பரிசோதனை மையத்துக்கு அழைத்துச் சென்றனர். மீதமுள்ள நபர்களுக்கு நோய் எதிர்ப்பு மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது.