திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தண்டராம்பட்டு, கிழக்கு ஆரணி, வெம்பாக்கம், நாவல்பாக்கம், சேத்பட், தச்சூர், வேட்டவலம், காட்டாம்பூண்டி, தெள்ளார், பெரணமல்லூர், வந்தவாசி, திருவண்ணாமலை நகராட்சி பகுதியிலிருந்து 5 பேர் உள்ளிட்ட 69 பேருக்கு இன்று(ஜூலை.9) நோய்த்தொற்று பாதிக்கப்பட்டுள்ளது.
நேற்று வரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2688 ஆக இருந்த நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2757 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது வரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 1107 ஆக உள்ளது, சிகிச்சை பலனின்றி 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
காஞ்சிபுரத்தில் இருந்து வந்த ஒருவர், புறநோயாளிகள் பிரிவில் இருந்த 14 பேர், நோயாளியுடன் தொடர்பில் இருந்த 23 பேர், இரண்டாம் நிலை நோய்த்தொற்று பெற்ற 24 பேர், மற்ற மாவட்டங்களில் இருந்து அனுப்பப்பட்ட 7 பேர் உள்ளிட்ட 69 பேருக்கு இன்று நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்பு கரோனா மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று நோய்த்தொற்று பாதிக்கப்பட்டவர்களில் முதல் நிலை, இரண்டாம் நிலை நோய்த்தொற்று பரவல் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளனர்.
வெளியூரில் இருந்து வந்தவர்கள் ஒருவர் மட்டுமே என்ற நிலையில் உள்ளது. எனவே தற்போது நோய்த்தொற்று உயர்ந்து வருவதற்கான காரணம் சமூக பரவல் மட்டுமே என்பதை இது தெளிவாக காட்டுகிறது.
இதையும் படிங்க: நடுக்கடலில் மீனவர்கள் மீது தாக்குதல்... 7 பேர் காயம்!