திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் 21 கரோனா தடுப்பு வாகனங்கள் அமைக்கப்பட்டு ஒவ்வொரு வாகனத்திற்கும் ஒரு ஓட்டுநர், காவல்துறை அலுவலர், வருவாய் துறை அலுவலர், நகராட்சி அலுவலர் என மொத்தம் நான்கு பேர் மாவட்டம் முழுவதும் நெடுஞ்சாலைகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இருசக்கர வாகனம், ஆட்டோ, நான்கு சக்கர வாகனம் ஆகியவற்றில் பயணிப்போர் முகக்கவசம், தகுந்த இடைவெளி ஆகிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கடைபிடிக்காத நபர்களுக்கு 100 ரூபாய் வீதம் அபராதம் விதித்து வருகின்றனர்.
அந்த வகையில், இன்று (ஆக. 27) திருவண்ணாமலை நகர், வேட்டவலம் புறவழிச்சாலையில் காவல் துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியாக தகுந்த இடைவெளி, முகக்கவசங்கள் அணியாமல் பேருந்தில் பயணித்த 65 நபர்களுக்கு 6,500 ரூபாய் அபராதம் விதித்தனர். மேலும் மூன்று வேன்களில் 25 நபர்களை ஏற்றிச் சென்றதால் அவர்களிடமும் 7500 ரூபாய் அபராதம் மொத்தமாக வசூலிக்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா தொற்று எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கி வரும் நிலையில், பேருந்து, வேன்களில் சுபநிகழ்ச்சி, துக்க நிகழ்ச்சிகளுக்காக அளவுக்கு அதிகமான எண்ணிக்கையில் பயணிகளை ஏற்றிச் செல்வதால் மேலும் கரோனா தொற்று அதிகரிக்கும் அச்சம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்களும், தன்னார்வலர்களும் வேதனை தெரிவிக்கின்றனர்.