ஆஸ்திரேலியாவிலிருந்து ஏர்இந்தியா சிறப்பு மீட்பு விமானம் நேற்றிரவு (ஜூலை17) 90 இந்தியர்களுடன் சென்னை வந்தடைந்தது.
அதில் 55 ஆண்களும், 34 பெண்களும் ஒரு சிறுவனும் இருந்தனர். அவர்களுக்கு விமானநிலையத்தில் மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டு, 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களில் ஆறு பேர் இலவச தங்குமிடங்களான மேலக்கோட்டையூர் தனியாா் கல்வி நிறுவனத்திற்கும், 84 பேர் கட்டணம் செலுத்தி தங்குமிடங்களான ஹோட்டல்களுக்கும் அனுப்பப்பட்டனர்.
இதேபோல், துபாயிலிருந்து ஏர் இந்தியா சிறப்பு மீட்பு விமானம் நேற்றிரவு 182 பயணிகளுடன் வந்தது. அதில் ஆண்கள் 153, பெண்கள் 20, சிறுவா்கள் 7, குழந்தைகள் 2 பேர் இருந்தனர். அவா்களுக்கும் பரிசோதனைகள் முடிந்து 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டனா். அவா்களில் 135 மேலக்கோட்டையூா் தனியாா் கல்வி நிறுவனத்திற்கும், 47 போ் ஹோட்டல்களுக்கும் அனுப்பப்பட்டனர்.
ஓமன் நாட்டின் மஸ்கட்டிலிருந்து இரண்டு சிறப்பு மீட்பு விமானங்கள் நேற்று நள்ளிரவில் 353 பயணிகளுடன் சென்னை வந்தது. அதில் ஆண்கள் 331, பெண்கள் 22 பேர் இருந்தனர். இவா்கள் அனைவரும் அங்குள்ள தனியாா் நிறுவனங்களில் பணியாற்றுபவா்கள்.
அந்த நிறுவனங்களே சிறப்பு அனுமதி பெற்று தனி விமானங்களில் அழைத்து வந்துள்ளதால், அவா்களுக்கு சென்னை விமானநிலையத்தில் இலவச மருத்துவ பரிசோதனைகள், இலவச தங்குமிடங்கள் கிடையாது. இதையடுத்து அனைவரும் கட்டணம் செலுத்தி தங்குமிடங்களான ஹோட்டல்களுக்கு அனுப்பி 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.
இலங்கையிலிருந்து இன்று அதிகாலை 23 இந்தியா்களுடன் சிறப்பு மீட்பு விமானம் சென்னை வந்தது. அவர்கள் அனைவருமே ஆண்கள். இவா்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் முடிந்து 14 நாள்கள் தனிமைப்படுத்த ஹோட்டலுக்கு அனுப்பப்பட்டனர்.