கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் அடூர் அருகே எரத்தோடு எனும் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான சிப்ஸ் கடையில் குழந்தைத் தொழிலாளர்கள் வேலை செய்துவருவதாக அப்பகுதி மக்கள் குழந்தைகள் நலக்குழுவிடம் புகார் தெரிவித்தனர்.
அதனடிப்படையில் பத்தனம்திட்டா மாவட்ட குழந்தைகள் நலக்குழு அலுவலர் ஜாகீர் உசேன் தலைமையிலான குழுவினர் சென்று அங்கிருந்த குழந்தைத் தொழிலாளர்களை மீட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், குழந்தைத் தொழிலாளர்கள் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 15 வயதுக்குள்பட்டவர்கள் எனத் தெரியவந்தது.இதனையடுத்து மீட்கப்பட்ட குழந்தைகள் அங்குள்ள காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
இதனிடையே கேரளாவிற்கு வேலைக்குச் சென்ற தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் ஆண்டிபட்டி பகுதிகளைச் சேர்ந்த தங்களது குழந்தைகள் கடந்த ஒரு மாதமாக தொடர்பில் இல்லை எனவும், அவர்களை மீட்டுத்தர வேண்டியும் மாவட்ட ஆட்சியரிடம் பெற்றோர் கோரிக்கை வைத்தனர்.
இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட குழந்தைகள் நலக்குழுவிற்கு மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்தார். அதனடிப்படையில் விசாரணை நடத்திய தேனி மாவட்ட குழந்தைகள் நலக்குழு, பத்தனம்திட்டா குழந்தைகள் நலக்குழுவில் குழந்தைகள் மீட்கப்பட்டிருப்பதை உறுதி செய்து அவர்களை சொந்த ஊர் அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுத்தனர்.
இந்நிலையில் மீட்கப்பட்ட குழந்தைத் தொழிலாளர்கள் தமிழ்நாடு – கேரள எல்லையான தேனி மாவட்டம் குமுளி சோதனைச் சாவடியில் இன்று ஓப்படைக்கப்பட்டனர். முன்னதாக கேரள மாநில சுகாதாரத் துறை சார்பில் அவர்களுக்கு கரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது.
அதில் அவர்களுக்கு தொற்று உறுதியாகவில்லை என்று தெரிந்த பிறகு பெரியகுளம் சைல்டுலைன், துணை மைய இயக்குநர் அனஸ்தியா, நலக்குழு தலைவர் சுரேஷ்குமார், உறுப்பினர்கள் நாகேந்திரன், பழனிச்சாமி ஆகியோர் குமுளியில் இருந்து 6 சிறுவர்களையும் அழைத்துக் கொண்டு தமிழ்நாட்டிற்கு வந்தனர். சிறுவர்கள் தேனி அருகே உள்ள காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டு பின் அவர்களின் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.
மேலும், குழந்தைகளை கேரளாவிற்கு அழைத்துச் சென்ற மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த முகவர் பாண்டி என்பவர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.