உலகளாவிய அச்சுறுத்தலாக மாறியிருக்கும் கரோனா பாதிப்பு, இந்தியாவில் தீவிரமடைந்துவருகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டில் மூன்றாம் கட்ட அபாய நிலையை எட்டியிருக்கும் கரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக கோவை மாவட்டத்தில் இதுவரை 244 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கரோனா பாதிப்பைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.
கோவையில், கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் மக்களுக்காக பணியாற்றும் அரசு மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு நான்கு லட்சம் ரூபாய் மதிப்புள்ள முகக்கவசங்கள், சானிடைசர், கரோனா தடுப்பு தனி நபர் பாதுகாப்பு கவச உடைகள் உள்ளிட்டவற்றை பொள்ளாச்சி ஆழியாறு அறிவுத்திருக்கோயில் நிர்வாகம் மற்றும் இந்தியன் வங்கி இணைந்து வழங்கியது.
கோவை மாவட்டத்தில் கோவிட்-19 நோயாளிகளுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கும் இ.எஸ்.ஐ மருத்துவமனையின் தலைமை மருத்துவரிடம் இதனை அறிவுத்திருக்கோயில் நிர்வாகத்தினர் நேரில் வழங்கினர்.