கரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால் தமிழ்நாட்டில் மண்டலம் விட்டு மண்டலம் செல்ல இ-பாஸ் கட்டாயம் என்று அரசு கூறியுள்ளது. இதனால், மாவட்டங்களில் அனைத்து எல்லைகளிலும் காவல் துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.
இருப்பினும், சட்டவிரோதமாக ஏராளமானோர் மாவட்டங்களினுள் நுழைகின்றனர். அவர்களை கண்டறிவது மிகவும் கடினமான ஒன்றாக உள்ளது என்று காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று இ-பாஸ் இல்லாமல் வருபவர்கள் குறித்து பொதுமக்கள் தகவல் கொடுத்த பின், அவர்களை கண்டறிந்து காவல் துறையினர் தனிமைப்படுத்தி வருகின்றனர்.
கோவையில் இ-பாஸ் இல்லாமல் இதுவரை 3 ஆயிரத்து 155 பேர் வந்துள்ளனர். இது குறித்து, செல்போன் மூலம் அக்கம்பக்கத்தினர் தகவலளித்து, அவர்களை வீட்டில் தனிமைப்படுத்தி சளி, ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன என சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
எனவே, இனிமேல் மாவட்ட எல்லைகளில் தீவிரமாக சோதனைகள் நடத்தப்படும் என்றும் இ-பாஸ் இல்லாமல் வருபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல் துறையினர் எச்சரித்துள்ளனர்.