பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த 'சுயசார்பு இந்தியா' குறித்து திருப்பத்தூரில் நடைபெற்ற விளக்கக் கூட்டத்தில், தமிழ்நாடு பாஜக துணைத்தலைவர் நரேந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், " உலகளாவிய பெருந்தொற்று நோயான கரோனா வைரஸ் இந்தியாவில் பரவுவதைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கு உள்ளிட்ட மிகச் சரியான முடிவுகளை நடைமுறைப்படுத்தி, நாட்டையே பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பாதுகாத்துள்ளது.
நாடு முழுவதும்144 தடை உத்தரவு போடப்பட்டதால் ஏராளமான ஏழை எளிய மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்ததை உணர்ந்து, அவர்களுக்குத் தேவையான அத்தியாவசிய உணவுப் பொருள்களை ரேஷன் கடைகள் மூலமாக விலையில்லாமல் வழங்கி பாதுகாத்தார்.
இந்தியா முழுவதுமுள்ள 1 லட்சத்து 10 ஆயிரம் சிறு, குறு விவசாயிகளுக்கு பிணையற்ற கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் சுமார் மூன்று லட்சம் கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
இந்திய அளவில் மட்டுமின்றி குறிப்பாக தமிழ்நாட்டில் மாநில அரசின் துரித செயல்பாட்டினால் கரோனா வைரஸ் பரவல் தற்போது கட்டுக்குள் வந்திருக்கிறது. இந்தியாவில் கரோனா தொற்று பாதிப்பில் இருந்து, பொதுமக்கள் இயல்பு நிலைக்குத் திரும்ப பாரத பிரதமர் ஆத்ம நிர்மன் பாரத் என்ற திட்டத்தை அறிவித்தார்.
ஆனால், தமிழ்நாட்டின் எதிர்கட்சி தலைவரான திமுக தலைவர் ஸ்டாலினுக்கு இந்த திட்டம் குறித்து புரிந்து கொள்ள முடியவில்லை. அவருக்கு புரிகிற மாதிரி சொன்னால் நமக்கு நாமே திட்டம், அவரது தந்தை கருணாநிதி கொண்ட வந்த திட்டம் தான்" என்றார்.