தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே இளையரசனேந்தல் பகுதியில் இருக்கும் பிள்ளையார்நத்தம் மற்றும் ஆண்டிப்பட்டி கிராமங்களுக்கு இடையே அதிகளவு விவசாய நிலங்கள் உள்ளன.
இந்த நிலங்களில் மக்காச்சோளம், உளுந்து, பாசி, சோளம் உள்ளிட்ட பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன.
இந்நிலையில், அங்குள்ள விவசாய நிலங்களில் ஆங்காங்கே மயில்கள் உயிரிழந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த விவசாயிகள், வனத்துறையினர் மற்றும் கால்நடை மருந்துவமனைக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு வனச்சரகர் சிவராம் தலைமையிலான வனத்துறையினர் விரைந்து வந்து உயிரிழந்து கிடந்த 28 மயில்களை மீட்டனர்.
தொடர்ந்து, அங்கு வந்த கால்நடை மருத்துவமனை மருத்துவர் கனிமொழி தலைமையிலான கால்நடை குழுவினர் மயில்களை உடற்கூறாய்வு செய்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
மேலும் விவசாய நிலங்களில் தற்போது விதைப்பு பணிகள் தொடங்கியுள்ளதால் பூச்சி மருந்து தெளித்த விதைகளை தின்ற காரணத்தினால் மயில்கள் உயிரிழந்ததா அல்லது விதைகளை மயில்கள் கொத்தி சேதப்படுத்ததுவதால் வேறு யாரேனும் விஷம் வைத்தார்களா என்பது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.