ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள பண்ணாரி - ராஜன் நகர் வனச்சாலையோரம் இரு துப்பாக்கிகள் கிடப்பதை கண்டு வாகன ஓட்டிநர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தவகலறிந்து அங்கு வந்த சத்தியமங்கலம் காவல்துறை மற்றும் வனத்துறையினர் துப்பாக்கிகளை கைப்பற்றி விசாரணையைத் தொடங்கினர்.
வனப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆராய்ந்த காவல்துறையினர், அதனடிப்படையில் பெருந்துறையைச் சேர்ந்த செந்தில்குமார் (47), பிரபு (34), ரஞ்சித்குமார் (30) ஆகிய மூவரையும் கைது செய்து விசாரணை செய்தனர்.
அவர்கள் மூவரும் வனவிலங்குகளை வேட்டையாட அப்பகுதிக்கு வந்ததும், அந்த நேரத்தில் அங்கு ரோந்து வந்த வனத்துறையினரை பார்த்ததும் அவர்கள் கொண்டுவந்த துப்பாக்கிகளை பள்ளத்தில் வீசியெறிந்ததும் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவர்கள் மீது அத்துமீறி வனப்பகுதியில் சுற்றியதாக வழக்குப் பதிவு செய்து தலா 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
காவல்துறையினர் தரப்பில் உரிய அனுமதியின்றி துப்பாக்கியுடன் திரிந்ததாக மூவர் மீதும் சத்தியமங்கலம் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து, தற்போது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த மூவரில் செந்தில்குமார் வழக்குரைஞர் என்பதும் அவர் மீது ஏற்கனவே வனவிலங்கை வேட்டையாடியதாக வழக்கு உள்ளதும் கவனிக்கத்தக்கது.