ராமநாதபுரத்தில் கடந்த சில நாள்களாக இரவு நேரங்களில் வீடுகளுக்கு முன்பு நிறுத்தி வைக்கப்படும் இருசக்கர வாகனங்கள் திருடப்பட்டு வந்தன. இது தொடர்பாக அதன் உரிமையாளர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில், லட்சுமிபுரம் வடக்குத் தெருவைச் சேர்ந்த 17 வயது சிறுவன் இரவு நேரங்களில் வீடுகளின் முன்பு தனியாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இருசக்கர வாகனங்களைத் திருடி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அந்த சிறுவனை கைது செய்து காவல் துறையினர், விசாரணை நடத்தியதில், திருடப்படும் வாகனங்களைப் பழைய இரும்பு வியாபாரி ஒருவரிடம் விற்று பணமாக்கி வந்தது தெரியவந்தது. அந்த சிறுவன் அளித்த தகவலின் அடிப்படையில், ராமநாதபுரம் புளிக்கார தெருவைச் சேர்ந்த பால்ராஜ் என்பவரின் பழைய இரும்புக் கடையில் காவல் துறையினர் சோதனை செய்தனர்.
அப்போது, சிறுவன் திருடி விற்கும் வாகனங்களை இவர் வாங்கி, அதன் உதிரி பாகங்களை தனியாக பிரித்தெடுத்து நல்ல விலைக்கு விற்று வந்தது தெரியவந்தது. இதன்படி, அவரையும் விற்பனைக்கு உடந்தையாக இருந்த கடையில் வேலை பார்த்த புளிக்காரதெரு பாண்டி ஆகியோரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.
இதையடுத்து, சிறுவனிடமிருந்து நான்கு இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்த காவல் துறையினர், பால்ராஜ், பாண்டி ஆகியோரிடமிருந்து விற்பதற்கு பிரித்து வைத்திருந்த திருட்டு இருசக்கர வாகனங்களின் உதிரி பாகங்கள், ஒரு செல்போனையும் பறிமுதல் செய்தனர்.