தருமபுரி மாவட்டம் பென்னாகரம் முள்ளுவாடி பகுதியில் இன்று (ஜூலை20) கரோனா தொற்று காரணமாக இருவர் உயிரிழந்தனர். தொற்று பரவிவுள்ள முள்ளுவாடி பகுதியில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் மலர்விழி நேரடியாகப் பார்வையிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் மலர்விழி கூறுகையில், "பென்னாகரம் பகுதியில் இன்று இருவர் கரோனா தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்ட நபர்கள் வைரஸ் தொற்று ஏற்பட்டு காலதாமதமாக சிகிச்சைக்கு சோ்ந்தனர். மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அனுமதிக்கப்பட்டு உயர்தர சிகிச்சை வழங்கியும் இதய நோய், சர்க்கரை நோய் ரத்த கொதிப்பு, மூச்சுத் திணறல் காரணமாக உயிரிழந்துள்ளனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூரு பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஊரடங்கு உத்தரவு நடைமுறைக்கு வந்ததால் அங்கிருந்து பலர் இ-பாஸ் பெறாமல் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். முள்ளுவாடி பகுதிக்கு இ-பாஸ் பெறாமல் வந்து வீட்டில் தங்கிய நபர்களிடமிருந்து 17 நபர்களுக்கு தொற்று பரவி உள்ளது.
முள்ளுவாடி பகுதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் 15 நாள்கள் வீடுகளுக்குள்ளேயே இருந்து மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இப்பகுதியில் உள்ளவர்களுக்கு சளி, காய்ச்சல், இருமல், வயிற்றுப் போக்கு உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் செயல்படும் சிறப்பு மருத்துவக் குழுவிடம் தெரிவித்து சோதனை செய்து சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.
கரோனா பாதிக்கப்பட்ட நபர்களுக்கு அரசு நாளொன்றுக்கு 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை செலவு செய்து மருத்துவ உயர் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், ஒரு கரோனா நோயாளிக்கு அரசு 5 லட்சம் ரூபாய் செலவு செய்து சிகிச்சையளிக்கின்றது. ஆகவே, மக்கள் மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து தகுந்த இடைவெளியை கடைபிடித்து வெளியில் செல்லும்போது முகக்கவசம் அணிந்து மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்" என்றார்.
மாவட்ட ஆட்சியர் ஆய்வின்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தார்.
இதையும் படிங்க: திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்' - பேராசிரியர் கு. ஞானசம்பந்தன்