திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் அருகேயுள்ள குமிளம்பாடு கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணியன். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு மணிகண்டன் (14) என்ற மகன் இருந்து, பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தான்.
இந்நிலையில், மணிகண்டன் அப்பகுதிக்கு அருகிலுள்ள சௌந்திரபாண்டியபுரம் கிராமத்தில் உள்ள கிணற்றிற்கு, தனது நண்பர்களுடன் குளிக்கச் சென்றுள்ளான்.
இதையடுத்து, கிணற்றின் கரைப் பகுதியிலிருந்து ஆழமான கிணற்றில் குதித்து விளையாடியுள்ளான்.
அப்போது, கிணற்றில் அமைக்கப்பட்டிருந்த மின் மோட்டாரில் இணைக்கப்பட்ட கயிற்றில், மணிகண்டன் எதிர்பாராதவிதமாக சிக்கியதாகக் கூறப்படுகிறது.
இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில், நீரில் தத்தளித்த மணிகண்டன், சிறிது நேரத்தில் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தான்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்த அப்பகுதி பொதுமக்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த மணிகண்டனின் உடலை மீட்டனர். பின்னர் இது குறித்து ராதாபுரம் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
தகவலையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், மணிகண்டனின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக ராதாபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கிணற்றில் மூழ்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகம் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: குறுவை சாகுபடிக்கு கல்லணையில் தண்ணீர் திறப்பு