திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயிலுக்கு தினசரி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர். பக்தர்கள் உண்டியலில் அளிக்கும் காணிக்கை மாதம் ஒருமுறை கோயில் ஊழியர்களால் எண்ணப்பட்டு வந்தது.
கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி கடைசியாக முருகன் கோயில் உண்டியல் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. அதன்பிறகு மார்ச் மாதம் 24ஆம் தேதி முதல் தொடர்ச்சியாக இம்மாதம் 30ஆம் தேதி வரை, கரோனா வைரஸ் காரணமாக பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை.
மேலும் மார்ச் மாதம் முதல் உண்டியல் எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டது. ரூபாய் நோட்டுக்கள் சேதமடையும் வாய்ப்பு உள்ளதாகக் கருதி, கோயில் நிர்வாகம் இந்து அறநிலைத் துறை ஆணையரிடம் அனுமதி பெற்று 116 நாள்களுக்கு பிறகு ஜூன் 22ஆம் தேதி அன்று உண்டியல் திறக்கப்பட்டு ஊழியர்களால் ரொக்கப் பணம், தங்கம், வெள்ளி என தனித்தனியாக பிரித்து எண்ணும் பணி தொடங்கியது. இப்பணியில் ஐம்பதிற்கும் மேற்பட்ட கோயில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
இந்நிலையில், கடந்த மூன்று நாள்களாக நடந்துவந்த பணி இன்று (ஜூன் 25) நிறைவு பெற்றது. இதில் ரூ. 59 லட்சத்து 67 ஆயிரத்து 759 ரூபாய் ரொக்கமும், 468 கிராம் தங்கமும், மூன்றாயிரத்து 210 கிராம் வெள்ளியும் இருந்ததாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:கால்பந்து விளையாடும் கோயில் யானை; வைரலாகும் வீடியோ