கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளுக்கு நாள் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதேபோல் கரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிகையும் ஆறாயிரத்தை நெருங்கி வருகிறது.
இதனிடையே, உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாள்தோறும் அதிகரித்து கொண்டே செல்கிறது.
இந்நிலையில், ஆரல்வாய்மொழி சந்திப்பில் செயல்பட்டு வரும் காய்கறி சந்தையில் உள்ள நாற்பதுக்கும் மேற்ப்பட்ட வியாபாரிகளுக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு கரோனா பரிசோதனைக்காக சளி மாதிரிகள் எடுக்கப்பட்டது.
அதன் முடிவு, நேற்று வெளியான நிலையில் சந்தையில் ஒரே நேரத்தில் பத்து வியாபாரிகளுக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து, ஆரல்வாய்மொழி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் சந்தை முழுவதும் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து வெளியில் வர விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
ஆரல்வாய்மொழி சந்தையில் ஒரே நேரத்தில் பத்து வியாபாரிகள் கரோனா தொற்று பாதிப்பு அடைந்துள்ளது அப்பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.