திருச்சி விமான நிலையத்தில் தங்கம் கடத்தும் பயணிகளை சுங்கத் துறை அலுவலர்கள் அவ்வப்போது கைது செய்து அவர்களிடமிருந்து தங்கத்தையும் பறிமுதல் செய்துவருகின்றனர். இருப்பினும், தங்கம் கடத்தப்படும் சம்பவங்கள் மட்டும் குறைந்ததாகத் தெரியவில்லை.
இந்நிலையில், நேற்று காலை மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா விமானம் மூலம் திருச்சிக்கு வந்த பயணிகளை சுங்கத் துறை அலுவலர்கள் சோதனையிட்டனர்.
அப்போது மலேசியாவைச் சேர்ந்த ஃபைசல் (43), அவரது தாயார் ஜெரினா ராணி ஆகியோரிடமிருந்து 5461 கிராம் (682 சவரன் 5 கிராம்) கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ. 1. 73 கோடி என சுங்த் துறையினர் தெரிவித்தனர்.
இதேபோல் நேற்று காலை சென்னையில் இருந்து இதே விமானத்தில் வந்த மற்றொரு பயணியான சென்னையைச் சேர்ந்த சபுகர் சாதிக் (32) என்பவரிடம் சோதனை செய்தபோது 318 கிராம் தங்கத்தை உடலில் மறைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடமிருந்து தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கத் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர். இவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.10 லட்சம் என சுங்கத் துறையினர் தெரிவித்தனர்.
இதன் மூலம், திருச்சி விமான நிலையத்தில் நேற்று ஒரே நாளில் 1.83 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிடிபட்ட மூவரையும், தங்கத்தையும் இன்று காலை சென்னையில் உள்ள மத்திய வான் நுண்ணறிவுப் பிரிவு அலுவலகத்தில் அலுவலர்கள் ஒப்படைக்க உள்ளனர்.