சென்னை: சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பேராசிரியர் கௌரியை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நியமனம் செய்துள்ளார்.
தமிழ்நாடு ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழக ஆளுநரும் சென்னை பல்கலைக்கழகத்தின் வேந்தருமான பன்வாரிலால் புரோகித் பேராசிரியர் கௌரியை துணைவேந்தராக நியமனம் செய்துள்ளார். அவர் பதவி ஏற்கும் நாளிலிருந்து 3 ஆண்டுகள் துணைவேந்தராக பதவி வகிப்பர்.
பேராசிரியர் கௌரி சிங்கப்பூரிலுள்ள நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். மாணவர்களுக்கு கற்பிப்பதில் 37 ஆண்டுகள் அனுபவம் பெற்றுள்ளார். அண்ணா பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக மானியக் குழுவின் இன்னொரு சிட்டி கல்வி ஆராய்ச்சி மல்டிமீடியா மையத்தின் இயக்குநராக பணியாற்றிவருகிறார்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் உற்பத்திப் பொறியியல் துறையில் கெளரவ பேராசிரியராகவும் பணிபுரிந்துள்ளார். ஜெர்மன், சிங்கப்பூர் உள்ளிட்ட 12 நாடுகளிலுள்ள பல்கலைக் கழகங்களுக்கு கௌரவ விரிவுரையாளராக சென்றுவந்துள்ளார். 94 ஆராய்ச்சிக் கட்டுரைகளையும், சர்வதேச அளவில் மாநாடுகளை நடத்தி , 30 ஆய்வுக் கட்டுரைகளை வழங்கி உள்ளார். ஐந்து புத்தகங்களை எழுதியுள்ளார்.
ஆராய்ச்சி திட்டங்களுக்காக, 25.76 கோடி நிதி பெற்று 18 ஆராய்ச்சிகளை செய்துள்ளதுடன், மூன்று ஆராய்ச்சிகளுக்கு காப்புரிமை பெற்றுள்ளார். 13 ஆராய்ச்சி மாணவர்களுக்கும், எம்.எஸ். மாணவர்களுக்கும் வழிகாட்டியாக இருந்துள்ளார். அண்ணா பல்கலைக்கழகத்தின் பதிவாளராகவும் பணிபுரிந்துள்ள இவர் தமிழ்நாடு அரசின் சில துறைகளில் இயக்குநராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக சுகுமார் என்பவரையும் நியமனம் செய்து ஆளுநர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.