உடுமலையில் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் ராதாகிருஷ்ணனின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு காலையில் அவரின் உதவியாளர் கர்ணன், அலுவலகப் பணிகளை மேற்கொண்டு வந்தார்.
இன்று (செப். 23) காலை 11.30 மணியளவில் அலுவலகத்திற்குள் முகக்கவசம் அணிந்தபடி நுழைந்த நான்கு பேர், அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த கர்ணனை கத்திமுனையில் கடத்தி வந்து வெளியே தயாராக இருந்த காரில் ஏற்றிக் கடத்திச் சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உடுமலை காவல் துறையினர், குற்றவாளிகளைப் பிடிக்கவும், கடத்தப்பட்ட கர்ணனை மீட்கவும் துரிதமாக செயலாற்றினர். தொடர்ச்சியாக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆராய்ந்து கர்ணன் கடத்தப்பட்ட வாகனத்தை பிடிக்க, சாலைகளில் தீவிர வாகன சோதனை நடத்தினர்.
மேலும், இவர் அரசியல் காரணுங்களுக்கு கடத்தப்பட்டாரா அல்லது சொந்த காரணங்களுக்காக கடத்தபட்டாரா என்று பல்வேறு கோணங்களில் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். இவ்வேளையில், உடுமலை தளி பகுதியில் கடத்தப்பட்ட கர்ணனை காவல் துறையினர் பத்திரமாக மீட்டனர்.
கடத்தலில் ஈடுபட்ட நான்கு பேரை பிடித்து காவல் துறையினர் விசாரித்ததில், கொடுக்கல் வாங்கல் பிரச்னைக் காரணமாக கர்ணன் கடத்தப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.