முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி காலமானார். இதையடுத்து அவர் வாழ்ந்த போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லம் நினைவு இல்லமாக மாற்றப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்தது. பின்னர் அதற்கான சட்ட ரீதியான பணிகள், பூர்வாங்க பணிகளும் முடிவடைந்தன.
வேதா நிலையம் இல்லத்தை, நினைவிடமாக மாற்ற ஏதுவாக சென்னை மாவட்ட முதன்மை உரிமையியல் நீதிமன்றத்தில், தமிழ்நாடு அரசு சார்பில் 68 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டது. இதையடுத்து அந்த இல்லம் அரசுடைமையானது. தற்போது அதனை நினைவு இல்லமாக மாற்றுவதற்கான பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற தொடங்கியிருக்கின்றன.
ஜெயலலிதா வசித்த வேதா இல்ல வளாகத்தைப் பொறுத்தவரையில் அங்குள்ள அசையா சொத்துக்கள் ஏற்கனவே பட்டியலிடப்பட்டிருக்கின்றன. இதைத் தொடர்ந்து ஜெயலலிதா வீட்டில் உள்ள பொருள்கள் குறித்த விவரங்கள் அரசிதழில் வெளியிடப்பட்டள்ளது.
வேதா இல்லத்தில் உள்ள பொருள்களின் விவரம் பின்வருமாறு:
- 4 கிலோ 372 கிராம் தங்கம்
- 601 கிலோ 424 கிராம் வெள்ளி
- 162 வெள்ளிப் பொருள்கள்
- 6,514 சமையல் பொருள்கள்
- 8,376 புத்தகங்கள்
- 394 நினைவுப் பரிசுகள்
- 11 டிவி
- 10 பிரிட்ஜ்
- 38 ஏசி
- 556 பர்னிச்சர்
- 15 பூஜைப் பொருள்கள்
- 1,055 காட்சி பெட்டி பொருள்கள்
- துணி, தலையானி, பெட்சீட், டவல் காலணி என 10,438 பொருள்கள்
- 29 தொலைபேசி மற்றும் கைபேசிகள்
- 221 சமையல் மின்சாரப் பொருள்கள்
- 251 மின்சாரப் பொருள்கள்
- 6 கடிகாரம் என மொத்தமாக 32 ஆயிரத்து 721 பொருள்கள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.