வங்கக் கடலில் உருவான, ‘நிவர்’ புயல் தீவிரப் புயலாக மாறி இன்று கரையைக் கடக்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த இரண்டு நாள்களாக தொடர்மழை பெய்துவருகிறது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு ஒரு வாரத்திற்குப் பின் மீண்டும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்திற்கும் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ளது செம்பரம்பாக்கம் ஏரி. இதன் முழுக்கொள்ளளவு 24 அடி. இந்நிலையில் நிவர் புயல் காரணமாக பெய்யும் தொடர் மழையினால் ஏரி சற்றுமுன் 23 அடி நெருங்கிவந்த நிலையில், அதிலிருந்து உபரி நீர் திறந்துவிடப்பட்டது.
தற்போது வினாடிக்கு ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. செம்பரம்பாக்கம் ஏரியைச் சுற்றி தொடர்ந்து மழை பெய்துகொண்டிருப்பதால் நான்காயிரத்து 300 கனஅடி நீர் செம்பரம்பாக்கம் ஏரிக்கு வந்துகொண்டிருக்கிறது.
இதனையடுத்து, தற்போது 19 மதகுகள் கொண்ட ஏரியில் ஏழு மதகுகள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன. செம்பரம்பாக்கம் ஏரியின் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால், அடையாறு ஆற்றங்கரைப் பகுதிகளுக்கு கடும் வெள்ள அபாய எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.