நடைபெற்று வரும் குளிர் கால கூட்டத்தொடரில் மத்திய அரசு அத்தியாவசியப் பொருள்கள் மசோதா 2020, விவசாயிகள் உற்பத்தி வர்த்தக மசோதா உள்ளிட்ட விவசாயம் சார்ந்த மசோதாக்களை நிறைவேற்றியது.
இந்த மசோதாக்கள் மீது நேற்று(செப்.20) நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றது. அப்போது எதிர்க்கட்சியினர் இந்த விவசாய மசோதாக்களுக்கு எதிராக கடும் அமளியில் ஈடுபட்டனர். இருப்பினும், இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
மாநிலங்களவையில் கடும் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீது உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வர பாஜக பரிசீலித்தது. அதன்படி பாஜகவின் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் முரளிதரன் அமளியில் ஈடுபட்ட உறுப்பினர்கள் மீது உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வந்தார்.
இதையடுத்து திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரெயின், ஆம் ஆத்மியின் சஞ்சய் சிங், காங்கிரஸ் கட்சியின் ராஜிவ் சதாவ், கே.கே.ராகேஷ், ரிபூன் போரா, சையத் நசீர் ஹுசைன் ஏ.ஐ.டி.சி கட்சியின் டோலா ஷென் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த இளமறம் கரீம் ஆகிய எட்டு பேரையும் விதிகளை மீறி, ஒழுங்கின்மையாக நடந்து கொண்டதற்காக மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு ஒரு வாரம் இடைநீக்கம் செய்வதாக அறிவித்தார்.
மேலும், ஞாயிற்றுக்கிழமை மாநிலங்களவையில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் தன்னை மிகவும் வேதனைப்படுத்தும் வகையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இதுதவிர 12 எதிர்க்கட்சிகள் சார்பில் அவை துணைத் தலைவர் ஹரிவன்ஸுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர அவைத் தலைவரிடம் நோட்டீஸ் அளித்தனர்.
ஆனால், இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் முறையான வடிவத்தில் இல்லை என்றும்; இதுபோன்ற தீர்மானங்களுக்கு 14 நாள் நோட்டீஸ் அளிக்க வேண்டியது அவசியம் என்றும் குறிப்பிட்டு இத்தீர்மானத்தை ஏற்க மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு மறுத்துவிட்டார்.
இதையும் படிங்க: 'விவசாயிகளிடம் பொய் கூறுவதை மோடி அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும்' - ப. சிதம்பரம்