பாட்னா (பிகார்): தமிழ்நாட்டில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து தவறான செய்தியை வெளியிட்டதாக, பிரபல யூடியூபர் மனீஷ் காஷ்யப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்த நிலையில், நேற்று (செப் 6) மனீஷ் காஷ்யப்பின் தாயார் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார்.
அந்த கடிதத்தில், “சனாதன தர்மத்திற்கு எதிராக பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் மீது தேசிய பாதுகாப்பு முகமை (NSA) நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கிறேன். என் மகன் இரு மாநிலங்களுக்கு இடையே மோதல் ஏற்பட காரணமாக இருந்ததாக கூறிய நிலையில், சனாதன தர்மம் என்ற கோட்பாட்டிற்கு எதிராக பேசி நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்திய தமிழ்நாடு முதலமைச்சரின் மகனும், அம்மாநில அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் மீது ஏன் தேசிய பாதுகாப்பு முகமை நடவடிக்கை எடுத்து, அவரை சிறையில் அடைக்கவில்லை?
அரசியமைப்புச் சட்டம் அனைவருக்கும் சமம் என்ற நிலையில், தமிழ்நாடு முதலமைச்சரின் மகன் மீது தேசிய பாதுகாப்பு முகமை நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேநேரம், தமிழ்நாட்டில் நிலவிய புலம்பெயர் தொழிலாளர்கள் தொடர்பான வழக்கை, உச்ச நீதிமன்றம் சுயாதீன குழு ஒன்றை அமைத்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கிறேன்.
ஒரு தாயாக, நீதியை எதிர்பார்க்கிறேன்” என குறிப்பிட்டு உள்ளார். மேலும், அவர் தனது மகன் மீது தமிழ்நாட்டில் ஆறு பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டதை தேசிய புலனாய்வு முகமை விசாரிக்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
முன்னதாக, கடந்த செப்டம்பர் 2 அன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மம் குறித்து பேசி இருந்தார்.
குறிப்பாக, சனாதன தர்மம் எதிர்க்கப்படுவதைக் காட்டிலும், ஒழிக்கப்பட வேண்டும் எனவும், டெங்கு, மலேரியா மற்றும் கரோனா போன்று சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் எனவும் உதயநிதி பேசி இருந்தார். இதற்கு நாடு முழுவதிலும் உள்ள பல பிரமுகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: "சனாதனம் என்பது தொழுநோய், எச்.ஐ.வி போன்றது" - நீலகிரியில் ஆ.ராசா பேச்சு!