கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்திய பாதுகாப்புத் துறையில் அக்னி வீர் என்ற புதிய வேலைவாய்ப்பை மத்திய அரசு உருவாக்கியது. இத்திட்டத்தின் மூலம் ராணுவத்தின் மூன்று படை பிரிவுகளிலும் 4 வருட ஒப்பந்தத்தில் “அக்னி வீர்” எனப்படும் வீரர்கள் பணிக்கு அமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டது.
ஆனால் இத்திட்டத்தின் மூலம் சேர்க்கப்பட்டவர்களில், 25 சதவிகித ராணுவ வீரர்கள் மட்டுமே 15 ஆண்டு பதவி காலத்தில் தொடர்வார்கள். மீதமுள்ளவர்கள், 11 லட்சம் ரூபாய் முதல் 12 லட்சம் ரூபாய் வரையிலான தொகையுடன் பணியிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என கூறப்படுகிறது, இதனை எதிர்த்து ராணுவத்தில் சேர விரும்பும் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
உத்தரப் பிரதேசம், ஹரியானா, பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட், ஜார்கண்ட், டெல்லி ஆகிய மாநிலங்களில் போராட்டம் விரிவடைந்துள்ளது.
மூன்றாவது நாளாக பீகார் மாநிலத்தில் இளைஞர்கள் ஒன்றிணைந்து ரயில் பாதை மற்றும் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் லக்கிசராய் நகரில் போராட்டம் நடத்திய மாணவர்கள் விக்ரம்ஷிலா எக்ஸ்பிரஸின் மூன்று பெட்டிகளை எரித்தனர்.
மொகியுதி நகர் ரெயில் நிலையத்தில் ரெயிலுக்கு இளைஞர்கள் தீ வைத்தனர். தும்ரான் ரெயில் நிலையத்தில் பாதைகளை வழிமறித்து, இளைஞர்கள் தீ வைத்து கொளுத்தியதால் பதற்றம் ஏற்பட்டது.
பீிகார் துணை முதல்வர் ரேணு தேவியின் வீட்டின் மீது இளைஞர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். உத்தர பிரதேசத்தில் உள்ள பல்லியா ரெயில் நிலையத்தில், இளைஞர்கள் ரெயிலை சேதப்படுத்தினர். போராட்டம் காரணமாக பல இடங்களில் ரயில்கள் தாமதமாக சென்றன.
வடமாநிலங்களை தொடர்ந்து, தென் மாநிலமான தெலுங்கானாவிலும் போராட்டம் பரவி உள்ளது. தெலுங்கானா மாநிலம் செகந்திரபாத் ரெயில் நிலையத்தில் ஹைதராபாத் - கொல்கத்தா செல்லும் பயணிகள் ரயிலுக்கு இளைஞர்கள் தீ வைத்தனர். ரெயிலுக்கு தீ வைத்ததுடன் அங்குள்ள கடைகளையும் அடித்து நொறுக்கி சூறையாடினர். நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். போராட்டத்தில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர், ஒருவர் உயிரிழந்தார்.
இதனிடையே மத்திய அரசு அக்னிபாத் திட்டத்தில் , 2022ம் ஆண்டுக்கான ஆட்சேர்ப்பில் உச்ச வயது வரம்பு 21 முதல் 23 வயதாக உயர்த்தப்படுவதாக தெரிவித்துள்ளது. மேலும் நான்கு வருட பதவி காலம் முடிந்தவுடன் அவர்களை எந்த வித பாதுகாப்பும் இல்லாமல் விட்டு விட மாட்டோம் என்றும் மத்திய அரசு உறுதியளித்துள்ளது. இருப்பினும் ஓய்வூதியம் இல்லாமை, பணி நிரந்தர உத்தரவாதம் இல்லாததது ஆகிய குறைகள் களையப்படவில்லை என பல தரப்பினர் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: அக்னிபாத் திட்டம்: அக்னி வீரர் பணிக்கு சேர்வது எப்படி ? எவ்வளவு சம்பளம் ? சலுகைகள் என்ன ?