புதுச்சேரி: தமிழ்நாடு, புதுச்சேரியில் மாடுகளுக்கு கோமாரி நோய் பரவிவருவதால், அதைத் தடுக்க ஊசி மூலம் மருந்து செலுத்தப்பட்டுவருகின்றது. இந்நிலையில் புதுச்சேரி ரெயின்போ நகரைச் சேர்ந்த பால் வியாபாரம் செய்யும் ராஜ்குமார் என்ற இளைஞர் உயிரிழந்த மூன்று கன்றுக்குட்டிகளை எடுத்துவந்து சட்டப்பேரவை வாயில் முன்பு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அவரிடம் கால்நடைத் துறை அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு போராட்டம் கைவிடப்பட்டது. இது குறித்து ராஜ்குமார் கூறும்போது, ”அரசு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தராததால் சுயமாக மாடுகளை வாங்கி பால் வியாபாரம் செய்துவருகிறேன்.
இந்நிலையில் கோமாரி நோய் தாக்கி தன்னிடம் இருந்த ஏராளமான மாடுகள் ஒன்றன்பின் ஒன்றாக உயிரிழந்து வந்தன. அதைத் தடுக்க கால்நடை மருத்துவமனைகளுக்குச் சென்று மருந்து கேட்டால் இல்லை என்று செல்கின்றனர்.
இதனைத் தொடந்து நான் வளர்த்துவந்த உயர் ரக ஜெர்சி ரக பசு கன்றுக்குட்டிகள் ஒரே நேரத்தில் இறந்துவிட்டதால் இதற்கு அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். மேலும் மாடுகளுக்கு உரிய சிகிச்சையளிக்காமல் அலட்சியம் செய்த மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஒபிஎஸ் வந்த விமானத்தில் முதியவருக்கு நேர்ந்த சோகம்