அலிகர் (உத்தரப்பிரதேசம்): உத்தரப்பிரதேச மாநிலம் புலாந்த்ஷர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், வெளி இடங்களுக்குச் சென்று ஆடலும் பாடலும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். அந்த வகையில், கடந்த 14 நாட்களாக அவர் மாவட்டத்தின் வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளுக்கு சென்று உள்ளார். இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 25 அன்று, ராம்பூரில் நிகழ்ச்சியை முடித்துவிட்டு, மீண்டும் புலாந்த்ஷரில் உள்ள தனது கிராமத்திற்கு திரும்பிக் கொண்டு இருந்து உள்ளார்.
அப்போது, அவரை காரில் வந்த கும்பல் பின் தொடர்ந்து வந்து உள்ளது. பின்னர், அக்கும்பல் இளைஞரை நிறுத்தி உள்ளது. இதனையடுத்து, இளைஞரைத் தாக்கிய அக்கும்பல், அவருக்கு மயக்க மருந்து கொடுத்து உள்ளது. தொடர்ந்து, அந்த இளைஞர் மயக்கம் அடைந்த பின்பு, அவரது பிறப்புறுப்பை அக்கும்பல் அறுத்து உள்ளது. பின்னர், பாதிக்கப்பட்ட இளைஞர் மயக்க நிலையில் இருந்து சுயநினைவுக்கு திரும்புவதற்குள் அக்கும்பல் அங்கு இருந்து தப்பி ஓடி உள்ளது.
பின்னர், சுயநினைவு திரும்பிய இளைஞர், இது தொடர்பாக காவல் துறையில் புகார் அளித்து உள்ளார். இதனையடுத்து, கடந்த ஆகஸ்ட் 31 அன்று இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், சவான்னி, அனிதா, முஷகன், ஷிவம், சிம்ரன் மற்றும் காயத்ரி ஆகிய 6 பேரை சம்பவம் தொடர்பாக அடையாளம் கண்டு உள்ளனர்.
மேலும், இது குறித்து சிவில் லைன் வட்டார அலுவலர் அசோக் குமார் சிங் கூறுகையில், “ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்தும் இரு கும்பலுக்கு இடையே பகுதியைப் பிரிப்பதில் ஏற்பட்ட தகராறே இந்த சம்பவத்திற்கான காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்து உள்ளது” என தெரிவித்தார்.
அது மட்டுமல்லாமல், பாதிக்கப்பட்டவரின் மருத்துவ அறிக்கை கிடைக்கப் பெற்ற பின், தேவையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், இது தொடர்பாக அனைத்து கோணங்களிலும் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் காவல் துறையினர் தெரிவித்து உள்ளனர்.
இதையும் படிங்க: பாலியல் வன்புணர்வு செய்து பெண் கொலை.. 24 மணிநேரத்தில் குற்றவாளி கைது..