மைசூர்(கர்நாடகா): கர்நாடகா மாநிலம் மைசூர் மாவட்டத்தில் உள்ள மல்லப்பா மலைப்பகுதியில் மாணவர் ஒருவரை சிறுத்தை தாக்கியதில் கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்தார். உயிரிழந்த மாணவர் மத்கர் லிங்கய்யஹூண்டி கிராமத்தில் உள்ள சன்னமல்லாப்பாவின் 18 வயது மகன் மஞ்சுநாத் என அடையாளம் காணப்பட்டார்.
மல்லப்பா மலைப்பகுதிக்கு அருகில் அமைந்துள்ள மரம்மா கோயிலிற்கு நண்பர்களுடன் சென்ற மஞ்சுநாத் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென அங்கு வந்த சிறுத்தை மஞ்சுநாத் மீது பாய்ந்து கொடூரமாக தாக்க தொடங்கியது. உடனிருந்த மஞ்சுநாத்தின் நண்பர்கள் கற்களை வீசி சிறுத்தையை விரட்ட முயன்றனர். இருப்பினும் சிறுத்தை அவரின் கழுத்தை அறுத்து கொடூரமாக தாக்கியது. சத்தம் கேட்டு கிராமத்தினர் அப்பகுதிக்கு செல்வதற்கு முன் கழுத்தில் ஏற்பட்ட அதிக ரத்த போக்கால் மஞ்சுநாத் பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்து மண்டல வன அலுவலர் சசிதர் மற்றும் பன்னூர் காவல் நிலைய அலுவலர்கள் அப்பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினர். மேலும் எம்எல்ஏ எம்.அஷ்வின்குமார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அப்போது பேசிய எம்.எல்.ஏ., இறந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு இழப்பீடு வழங்குவதாக உறுதியளித்தார். உயிரிழந்த மஞ்சுநாத் மைசூர் மகாராஜா கல்லூரியில் பி.காம் படித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:குவைத் விபத்தில் உயிரிழந்த இளைஞர் - உடலை மீட்டு தருமாறு உறவினர்கள் கோரிக்கை