புதுச்சேரி: கடந்து இரண்டு நாட்களாக, தொடர்ந்து கனமழை பெய்துவருவதால், தாழ்வானப் பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனையடுத்து கிருஷ்ணா நகர், ரெயின்போ நகர், எழில் நகர் போன்ற பகுதிகளில் மழை நீர் முழங்கால் அளவிற்கும், மற்ற இடங்களில் படகு செல்லும் அளவிற்கும் மழைநீர் தேங்கியுள்ளது.
படகு சேவை
இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதற்குச் சிரமப்படுகிறார்கள். இந்நிலையில், அப்பகுதி மக்களுக்கு உதவிடும் வகையில் காமராஜ் நகர்ப் பகுதியைச் சேர்ந்த கோபி என்ற இளைஞர் படகைக் கொண்டு வந்து சாலை வெள்ளத்தில் நிறுத்தினார்.
இதனையடுத்து, உதவி தேவையானவர்களைப் படகில் அழைத்துச் சென்று தேவையான இடத்தில் விடுவதும், திரும்பக் கொண்டு விடுவதுமான பணிகளைச் செய்து வருகிறார்.
சட்டப்பேரவை உறுப்பினருக்கு சுட்டிக்காட்டிய இளைஞர்
இதைப்பற்றி கோபியிடம் பேசுகையில், 'இந்த தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர் ஜான்குமார் மழை நீர் தேங்குவதைத் தடுக்க நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. எனவே, அவருக்கு அதைச் சுட்டிக் காட்டும் வகையில் இந்த படகு சேவையைத் தொடங்கி உள்ளேன்' என்றார்.
மேலும், புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் தேர்தல் களத்தில் இறங்கும் நோக்கத்தில் பல்வேறு இயக்கத்தினர் மழைக்காலங்களில் திடீர் சேவைப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:கரோனாவால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ரூ. 50ஆயிரம் இழப்பீடு