காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அமைப்பான இந்திய இளைஞர் காங்கிரசின் தேசிய செயற்குழுக்கூட்டம் நேற்று (மார்ச்9) நடைபெற்றது. இதை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி முன்னிற்று நடத்தினார்.
இந்தக் கூட்டத்தில் இளைஞர் காங்கிரஸ் அமைப்பின் தேசிய தலைவர் பி.வி. சீனிவாஸ் பேசுகையில், “காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி மீண்டும் பொறுப்பேற்க வேண்டும்” என வலியுறுத்தினார். பின்னர், ராகுல் காந்தியை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக நியமிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்தக் குரல் ஒட்டுமொத்த காங்கிரஸ் கட்சியின் குரல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில வாரங்களுக்கு முன் டெல்லி, மத்தியப் பிரதேச மாநில காங்கிரஸ் அமைப்புகளும் காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்க வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றியது.
கடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்ததையடுத்து அதற்கு பொறுப்பேற்று ராகுல் காந்தி தலைவர் பதவியிலிருந்து விலகினார். கட்சியின் தற்காலிக தலைவராக சோனியா காந்தி உள்ள நிலையில், வரும் ஜூன் மாதத்திற்குள் காங்கிரசுக்கு முழு நேரத் தலைவர் நியமிக்கப்படும் என அக்கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கூண்டோடு காலியாகும் திரிணாமுல் காங்கிரஸ்...பாஜகவை நோக்கி செல்லும் எம்எல்ஏக்கள்!