சிம்லா: இமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவில் உள்ள தியோக்கில் கார் கூப்பன் மோசடி கும்பலிடம் ரூ.1,40,000 ஆயிரம் பணத்தை இழந்த இளைஞர் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து சிம்லா போலீசார் கூறுகையில், தியோக் நகரில் வசிக்கும் பிரேம் லால் சர்மா என்பவருக்கு 3 நாட்களுக்கு முன்பு ஒரு கடிதம் வந்துள்ளது. இந்த கடிதத்தை பிரேம் லால் சர்மாவின் மகன் வினீத் சர்மா பிரித்து பார்த்துள்ளார். அதில் ஆயுர்வேத கேர் பிரைவேட் லிமிடெட் சிக்கிம் என்னும் நிறுவனம் அனுப்பியது போல் எழுதப்பட்டிருந்தது. அதோடு ஸ்க்ராட்ச் கார்டும் இருந்துள்ளது.
இந்த ஸ்க்ராட்ச் கார்டை வினீத் கீறி பார்த்துள்ளார். அதில் 80830 எண் மற்றும் ஹெல்ப்லைன் எண் எழுதப்பட்டிருந்தது. அந்த எண்ணுக்கு வினீத் போன் செய்துள்ளார். அப்போது எதிரே பேசிய நபர் 80830 என்ற எண்ணுக்கு சோனெட் கார் பரிசாக விழுந்துள்ளது என்று தெரிவித்துள்ளனர். அதோடு காருக்கு வரி கட்டவேண்டும் என்று பணம் கேட்டுள்ளனர். இதை நம்பி வினீத் ரூ.3,500, ரூ.1,10,500, ரூ.26,600 என 3 முறை கூகுள் பே மூலம் பணம் செலுத்தியுள்ளார்.
இந்த பணத்தை பெற்ற உடன் அந்த செல்போன் எண் அணைத்து வைக்கப்பட்டது. இதையடுத்தே வினீத் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். இந்த நிலையில் இன்று (டிசம்பர் 13) தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக அவரது தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை தொடங்கப்பட்டது. ஐபிசி 420 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற கும்பலிடம் மக்கள் உஷாராக இருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: பிகாரில் வகுப்பறைக்குள் உயிரிழந்து கிடந்த மாணவி