கர்நாடகா மாநிலம், பிடர் பகுதியைச் சேர்ந்தவர் ஜீவன் அம்பாட்டி. இவர் பெங்களூருவில் உள்ள அமேசான் நிறுவனத்தில் குழுத் தலைவராக பணியாற்றி வந்துள்ளார். இவர் நீண்ட நாள்களாகவே தன்னால் எதுவும், சாதிக்க முடியவில்லை என்று மன அழுத்தத்திலிருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தனக்கு யாருமே இல்லை என மன வருத்தத்திலிருந்த ஜீவன், நான்கு நாளுக்கு முன்பு வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். மேலும் வீட்டிற்குள் நுழைந்தவுடன் யாரும் மின்விளக்குகளை உபயோகிக்க வேண்டாம், ஏனென்றால் வீடு முழுவதும் கேஸ் பரவி உள்ளது என்று எழுதி வைத்துவிட்டு உயிரிழந்துள்ளார்.
ஜீவனுடன் தங்கி இருந்த நண்பர்கள் ஊரிலிருந்து, மூன்று நாள்கள் கழித்து வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது ஜீவன் உயிரிழந்து கீழே விழுந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தவர்கள் உடனே, காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர்.
அத்தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், ஜீவன் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு விசாரணை மேற்கொண்டனர்.
தற்கொலை செய்துகொள்வது எப்படி என்று அவர் யூ-ட்யூப்பில் பார்த்துள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.