புதுச்சேரியில் நீரும் ஊரும் திட்டத்தின் கீழ் தூர்ந்துபோன குளங்கள் கண்டறியப்பட்டு தூர்வாரப்படுகின்றன. இத்திட்டத்தில் ஏம்பலம் தொகுதிக்குள்பட்ட புதுகுப்பம் கிராமத்தில் 200ஆவது குளம் தூர்வாரும் பணியை துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தொடங்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில் கவிஞர் சினேகன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய தமிழிசை, “நீரும் ஊரும் திட்டத்தின் கீழ் குளங்கள் தூர்வாரப்பட்டதால் நிலத்தடி நீர் அதிகரித்துள்ளது. புதுச்சேரியில் உள்ள அனைத்து குளங்களும் தூர்வாரப்படும். வரும் 75ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு 75 ஆயிரம் மரக்கன்றுகள் நடவும் திட்டமிடப்பட்டுள்ளது.
நான் எப்போதும் என்னை ஆளுநர் என கூறுவதில்லை. உங்கள் சகோதரிதான் நான். என்னை அக்கா என்றும் கூப்பிடலாம். யார் வேண்டுமானும் எப்படியும் கூப்பிடலாம். நான் எப்போதும் உங்கள் சகோதரி” என்றார்.