150 வார்டுகள் கொண்ட ஹைதராபாத் மாநகராட்சியில் 149 வார்டுகளுக்கு (சின்னம் குழப்பம் காரணமாக ஒரு வார்டுக்குத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது) நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன.
அதில், 2016ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 99 இடங்களைக் கைப்பற்றிய ஆளும் டிஆர்எஸ் கட்சி இந்த முறை 55 இடங்களில்தான் வெற்றிபெற்றது. அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி 44 இடங்களில் வென்றுள்ளது. காங்கிரஸ் இரண்டு வார்டுகளைக் கைப்பற்றியுள்ளது.
கடந்த தேர்தலில் நான்கு இடங்களில் மட்டுமே வென்ற பாஜக இந்தத் தேர்தலில் 48 வார்டுகளைக் கைப்பற்றியுள்ளது. இது பாஜகவின் அசுர வளர்ச்சி என்றே கூறலாம். இந்த வெற்றியை தெலங்கானா பாஜகவினர் கொண்டாடிவருகின்றனர்.
இந்த வெற்றி குறித்து உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறுகையில், "பாஜகவின் தலைமை மீதும், மரியாதைக்குரிய பிரதமர் மோடி மீதும் நம்பிக்கைவைத்து பெருநகர ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தலில் வாக்களித்த 'பாக்யா நகர்' வாக்காளர்களுக்கு எனது நன்றிகள்" என்றார். யோகி முன்னதாக ஹைதராபாத்தை பாக்யா நகர் என்று பெயர் மாற்றம்செய்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மத்திய உள் துறை அமைச்சரும் ஹைதராபாத் மக்களுக்குத் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.