லக்னோ(உத்தரப்பிரதேசம்): உத்தரப்பிரதேச மாநிலத்தின் சட்டப்பேரவைத்தேர்தல் முடிவுகள், இன்று(மார்ச்.10) வெளியாகின. இதில், பாரதிய ஜனதா கட்சி 275 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சிையப் பிடித்துள்ளது. அதன்மூலம், ஏறத்தாழ 36 ஆண்டுகள் கழித்து தொடர்ந்து இரண்டாம் முறை ஆட்சிக்கட்டிலில் ஏறும் முதலமைச்சர் என்ற பெருமையை தற்போதைய உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அடைந்துள்ளார்.
மேலும், நொய்டாவில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ளும் எந்த முதலமைச்சரும் இதுவரை உத்தரப்பிரதேசத் தேர்தலில் வெற்றி கண்டதில்லை என்ற ஒரு நம்பிக்கை வெகுநாட்களாக நீடித்து வந்தது. அதனையும் இந்தத் தேர்தலின் வெற்றியின் மூலம் யோகி ஆதித்யநாத் முறியடித்துள்ளார்.
2000ஆம் ஆண்டில் பகுஜன் சமாஜ் கட்சியுடம் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி வைத்து ஆட்சியைப் பிடித்ததில் ராஜ்நாத் சிங் முதலமைச்சரானார். ஆனால், இந்தக் கூட்டணியில் இருந்து ஓராண்டிலேயே பகுஜன் சமாஜ் கட்சி பின்வாங்கியதால், அந்த ஆட்சியை பாஜகவால் ஒரு ஆண்டு கூடத் தொடர முடியவில்லை.
அதன்பின் 17 ஆண்டுகள் கழித்து 2017ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக 300 தொகுதிகளில் வெற்றி பெற்று யோகி ஆதித்யநாத் முதலமைச்சரானார்.
பின், தற்போதைய 2022 தேர்தலில் வெற்றி கண்டதன் மூலம் 36 ஆண்டுகளாக மாறாத உத்தரப்பிரதேசத்தின் தேர்தல் வரலாற்றை யோகி ஆதித்யநாத் மாற்றியுள்ளார். 36 ஆண்டுகளுக்கு முன்பு உத்தரப்பிரதேசத்தில் 1980 - 1988 (தொடர்ந்து இரண்டு முறை ) காங்கிரஸ் ஆட்சியமைத்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:5-வது முறையாக தொகுதியை தக்கவைத்துக் கொண்ட மணிப்பூர் முதலமைச்சர்