டெல்லி: வங்காள விரிகுடா கடலில் உருவாகிய 'யாஸ்' புயல் அதிதீவிர புயலாக மாறியுள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி, யாஸ் புயல் 12 கி.மீ., வேகத்தில் வடக்கு, வடக்கு திசை நோக்கி நகர்ந்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. ஒடிசா - மேற்கு வங்க கடற்கரைகளில், காலை 10 முதல் 11 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில், இது பசுதேவ்பூர் - பஹானாகா இடையே கரையைக் கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயல் கரையைக் கடக்கும் வேளையில், மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும், இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேற்கு வங்கத்தில் இருந்து மட்டும் 12 லட்சம் மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். யாஸ் புயல் காரணமாக ஒடிசா, மேற்கு வங்க கடலோரப் பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது. அங்கு கடற்படையினர், தேசியப் பேரிடர் மீட்பு படையினர் தயாராகவுள்ளனர்.
இதற்கிடையே, சென்னையில் 40 கி.மீ., வேகத்தில் காற்று வீசும் என்பதால், யாரும் நடந்தும், இரு சக்கர வாகனங்களிலும் செல்லக்கூடாது என்று தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரித்துள்ளது.