டெல்லி: இண்டிகோ விமானத்தில் வழங்கப்பட்ட ‘சாண்ட்விச்சில்’ புழு இருந்ததாக பெண் பயணி வெளியிட்ட வீடியோ ஆதாரத்தினை அடுத்து, விமான நிறுவனம் சார்பில் பயணியிடம் மன்னிப்பு கேட்கப்பட்டதுடன், உரிய விசாரணை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தலைநகர் டெல்லியில் இருந்து மும்பைக்கு நேற்றைய முன்தினம் (டிச.29) 6E 6107 என்ற இண்டிகோ விமானம் சென்றுள்ளது. இந்த விமானத்தில் பயணித்த பெண் பயணி ஒருவர், விமானத்தில் தனக்கு வழங்கப்பட்ட சாண்ட்விச்சில் புழு இருந்ததாகக் கூறி, சமூக வலைத்தளத்தில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
அதில் அவர், தனக்கு வழங்கப்பட்ட சாண்ட்விச்சில் புழு இருப்பது குறித்து விமானப் பணியாளர்களிடம் தெரிவித்தும், அவர்கள் தொடர்ந்து அந்த சாண்ட்விச்-ஐ மற்ற பயணிகளுக்கு வழங்கியதாகவும், அதில் யாரேனும் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டிருந்தால், அதற்கு யார் பொறுப்பேற்பது என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதையடுத்து, புழுவுடன் கூடிய அந்த சாண்ட்விச் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியது. இதைத் தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து மன்னிப்பு கோரியுள்ள இண்டிகோ விமான நிறுவன செய்தித் தொடர்பாளர், “பெண் பயணியின் புகாரினை அடுத்து, குறிப்பிட்ட அந்த சாண்ட்விச்சின் சேவை நிறுத்தப்பட்டுவிட்டது.
இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டு உள்ளது. சாண்ட்விச் விநியோகம் செய்த உணவு நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும், பயணியின் அசௌகரியத்திற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்” எனத் தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க: திருடுபோன வீட்டில் போலீசார் சோதனை..திருடிய நகைகளை திரும்ப வீசிச் சென்ற மர்ம நபருக்கு வலைவீச்சு